search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது- ராமதாஸ் எதிர்ப்பு

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்ப தற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்தால் அதை மத்திய அரசு பரிசீலிக்காது என்று உறுதியளித்து இருந்தார்.

    அதே நடைமுறையை பின்பற்றி, தமிழகத்தின் இசைவு பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

    அதுவும் மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதே தவறு என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், திருப்பி அனுப்புவது தான் சரியான செயலாக இருக்க முடியும்.

    அதை விடுத்து முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மத்திய அரசே ஏற்பாடு செய்வது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். மேகதாது அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு சாதகமாக செயல்படக்கூடாது.

    எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக்கூடாது.

    அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையை கர்நாடத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×