search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து மலை ரெயில் நீராவி என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.
    X
    திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து மலை ரெயில் நீராவி என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.

    ரூ.8½ கோடியில் வடிவமைக்கப்பட்ட நீலகிரி மலை ரெயில் என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைப்பு

    ஊட்டி மலை ரெயிலுக்கான நீராவி என்ஜினில் உள்ள 3,600 பாகங்களில் 1,400 பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.
    திருச்சி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் மலை ரெயில் தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நீராவி ரெயிலானது சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது.

    நீலகிரியின் இயற்கை எழிலையும், வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் இந்த ரெயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். இந்தநிலையில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய ஊட்டி மலை ரெயிலுக்காக நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரூ.8½ கோடி செலவில் நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டது.

    இதேபோல், ரூ.9 கோடியே 80 லட்சம் செலவில் டீசல் பணிக்கூடத்தில் 444-வது பொதுத்துறை நிறுவன டீசல் என்ஜின் பழுது நீக்கி பராமரிப்பு பணியும், வேகன் கட்டுமான கூடத்தில் 200- வது வகை கார்டு வேகனும் உருவாக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் தயாரானதை தொடர்ந்து ஊட்டிக்கு வழியனுப்பி வைக்கும் விழா பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடைபெற்றது.

    அவைகளை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை தற்போது 93-வது ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் பொன்மலை பணிமனையில் ரெயில் என்ஜின்கள் தயாரிப்பு பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதேநேரம் புதிய வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புதிய தொழில் நுட்பங்களுடன் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    ஊட்டி மலை ரெயிலுக்கான நீராவி என்ஜினில் உள்ள 3,600 பாகங்களில் 1,400 பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். எஞ்சிய பாகங்கள் கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு புதிய என்ஜின்கள் உருவாக்கப்பட்டன.

    தற்போது இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள இந்த ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை ரெயிலுடன் இணைத்து பயணத்தை தொடங்க உள்ளதாக பொன்மலை ரெயில்வே பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழாவில் ரெயில் என்ஜின் பெண் டிரைவர்களுக்கும், நீராவி என்ஜின் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே முதன்மை மெக்கானிக்கல் என்ஜினீயர் சீனிவாஸ், பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி மறு சீரமைக்கப்பட்ட பராம்பரிய சதுக்கத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நேரோ கேஜ் ரெயில் பெட்டியும், ஒரு புராதன மீட்டர் கேஜ் நீராவி என்ஜினும் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டு இருந்தது. நீராவி என்ஜின் உதிரி பாகங்களுக்கான கண்காட்சியும் நடைபெற்றது.

    இதையடுத்து நீராவி என்ஜின் ராட்சத லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×