search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி
    X
    கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி

    பயிர் கடனில் ரூ.516 கோடி முறைகேடு- சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு

    கூட்டுறவு துறையின் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் தொழிற்பயிற்சி கல்லூரிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இவற்றில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை உரிய விலை கொடுத்து சங்கங்கள் பெற வேண்டும். முன்பு தேடி வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்தது. பின்னர் அது படிப்படியாக குறைந்தது. அதை சரிசெய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கும் கடன் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. முதல்-அமைச்சருடன் ஆலோசித்து உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இயற்கை வேளாண் முறையை கண்டிப்பாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஏனென்றால், ரசாயன உரங்கள் தட்டுப்பாட்டை செயற்கையாக கொண்டு வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள 10 பெரிய நிறுவனங்கள் இதைச் செய்கின்றன.

    கடந்த ஆட்சியில் 1 லட்சத்து 57 ஆயிரம் டன் உர மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது 1 லட்சத்து 65 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. காவிரி பாசன கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளதால், இப்போது சாகுபடி செய்யும் பரப்பளவு உயர்ந்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக யூரியா உர மூட்டைகள் தேவைப்படுகிறது என்று என்னிடமே போன் செய்து கேட்டார்கள்.

    இயற்கை உரங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். மண்புழு உர தயாரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

    பெண்களும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில், 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சுயஉதவி குழுக்களை கொண்டுவந்தார். 2006-2011-ம் ஆண்டுகளில் அந்த துறையை தனது பொறுப்பில் ஏற்று, மு.க.ஸ்டாலின் ஏற்று சுழல் நிதி வழங்கி மெருகூட்டினார்.

    தற்போது, சுயஉதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். எனது அறிவிப்பில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் பயிர் கடன் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு உயர்த்தப்படும்.

    பயிர் கடன் தள்ளுபடிக்கு 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. 19 சதவீதம் பேருக்கு இன்னும் ரசீது வழங்கப்படவில்லை. 2½ லட்சம் பேர் ரூ.2,393 கோடி கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். அதாவது, சிட்டா அடங்கலில் காட்டிய சாகுபடி பரப்பை விட பல மடங்கு கூடுதலாக கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.516 கோடி கூடுதல் அளவு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் ரூ.503 கோடி அளவுக்கு கூடுதல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏதோ திட்டம் போட்டே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ.4 கோடியே 96 லட்சம் கடன் வழங்க வேண்டிய இடத்தில் ரூ.16 கோடியே 70 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் தரிசு நிலத்திற்கு பயிர் கடன் வழங்கப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்று, அந்த தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

    கூட்டுறவு துறையின் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் தொழிற்பயிற்சி கல்லூரிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இவற்றில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் கிராமத்தில், தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தில் 26 ஆயிரம் ச.மீ. பரப்பில் ரூ.85 கோடி உத்தேச திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுநர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின விதிகளை பின்பற்றியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில், 68 நேரடி கொள்முதல் நிலையங்களை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்படும்.

    மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கும் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி வீதத்தை 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வழங்கப்படும் கடன் அளவும் ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் உள்ள 3 லட்சத்து 63 ஆயிரத்து 881 மகளிர் சுயஉதவி குழுக்களையும் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கே.சி.சி. திட்டத்தின் கீழ் விவசாய கடன் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    லாபத்தில் இயங்கும் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும். கூட்டுறவு சங்க தயாரிப்பான மங்களம் மஞ்சள் தூள் மற்றும் பென்னாகரம் புளியை அதிக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
    Next Story
    ×