search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- வார்டு மறுவரையறை பணிகள் முடிவடைந்தன

    உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து 9 மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விரிவான ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவைத் தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பூர்வாங்க பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச் சாவடிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.

    76 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறையில் 35 பக்கங்களில் வாக்குச்சாவடி அமைப்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.

    முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து 9 மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விரிவான ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.

    9 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விரைவில் வெளியிட உள்ளார். அநேகமாக 13-ந் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சட்டசபையில் நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்து இருந்தார். அதில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காக வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக அப்போது அரசு பிரித்து உத்தரவிட்டு இருந்தது.

    இதே போல் விழுப்புரம் மாவட்டத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தை காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 2 மாவட்டமாகவும், திருநெல்வேலி மாவட்டத்தை திருநெல்வேலி, தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.

    தற்போது இந்த மாவட்டங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

    புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டிய காரணத்தால் அந்த சமயத்தில் உடனே தேர்தல் நடத்தப்படவில்லை.

    இப்போது வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் இங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 9 மாவட்டங்களிலும் 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டுகள், 1,381 ஒன்றிய வார்டுகள், 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு விரைவில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்ட பிறகு தான் நாகை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவானது. எனவே இப்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது.

    இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

    எனவே உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளிலும் அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இதே போல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் 9 மாவட்ட செயலாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதே போல் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளன. எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்.

    அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும்.

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்தன. அதன் வார்டுகள் விவரம் வருமாறு:-

    Next Story
    ×