search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    உள்ளாட்சித் தேர்தல்- கமல்ஹாசன் வரும் 26ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் கட்சி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்ற அந்த கட்சி சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் வெற்றியை நெருங்கி வந்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

    தேர்தலுக்கு பின்னர் கட்சியின் தலைமை நிர்வாகிகள் சிலர் வெளியேறினார்கள். இதனையடுத்து கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன் அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகும்படி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.

    தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் வரும் வியாழன் அன்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். இதற்காக வரும் 26-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மண்டல செயலாளர்கள் (கட்டமைப்பு) மற்றும் மாநில செயலாளர்கள்(அணிகள்) ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த கூட்டத்தில், கட்சி கட்டமைப்பு ரீதியாக தற்போதுள்ள நிலை, தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள், வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    முன்னதாக இன்று நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படப்பிடிப்பு காரணமாக வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உட்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார்.

    கூட்டணியில் வந்து சேர்ந்த சின்ன சின்ன கட்சிகளுக்கு கூட கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டதால் தொண்டர்கள் சோர்ந்து போனார்கள். அந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×