search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர் தாக்குதலில் காயம் அடைந்த நகை கடை அதிபர் சீனிவாசன், அவரது மனைவி காளியம்மாள்.
    X
    கொள்ளையர் தாக்குதலில் காயம் அடைந்த நகை கடை அதிபர் சீனிவாசன், அவரது மனைவி காளியம்மாள்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே நகை கடை அதிபர்- மனைவியை தாக்கி 10 பவுன் நகை கொள்ளை

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நகை கடை அதிபர் மற்றும் அவரது மனைவியை தாக்கி 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வண்ணான்கோவில் பிரிவு ராஜ்நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 74). இவர் பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள் (68).

    நேற்று வழக்கம்போல மாலை 5 மணிக்கு சீனிவாசன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 7.30 மணி அளவில் காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்திருந்தனர். அப்போது 4 பேர் கும்பல் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீனிவாசன் வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்கள் சீனிவாசனையும், காளியம்மாளையும் இரும்பு ராடால் தாக்கினார். இதில் அவர்கள் 2 பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் காளியம்மாள் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 7 பவுன் தாலிச் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 11 கிராம் தங்க வளையல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    காயம் அடைந்த சீனிவாசனும், காளியம்மாளும் சத்தம் போட்டு அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சீனிவாசனையும், காளியம்மாளையும் மீட்டு தனியார் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்த நபர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். அவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவனை பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவனது பெயர் பிரபாகரன் (28) என்பதும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருடன் வந்த மேலும் 3 பேர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற நகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சம்பவ இடத்தை டி.எஸ்.பி. ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×