search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தகவல்

    பூமலூர், வேலம்பாளையம், ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. எனவே தடுப்பூசிகளை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    கூட்டத்தில் 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ரவி பேசுகையில்:

    கரைப்புதூர் ஊராட்சி செந்தூரன் காலனியில் புதியதாக பகுதி நேர ரேசன் கடை ஏற்படுத்த வேண்டும். கரைப்புதூரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே தொகுப்பு வீடுகளை பராமரித்து தர வேண்டும். சொந்த வீடு இல்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்றார்.

    2-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம் பேசுகையில்:

    நடுவேலாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் வேண்டும். பூமலூர், வேலம்பாளையம், ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. எனவே தடுப்பூசிகளை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். பி.ஏ.பி.பாசனத்தண்ணீரை குளம், குட்டைகளுக்கு விட வேண்டும். பூமலூர் ஊராட்சியில் சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டும் என்றார். 

    ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் பேசுகையில்:

    பல்லடம் ஒன்றிய பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக சென்றடையவில்லை. வருவாய் துறை, மருத்துவ துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி அதிக அளவில் பயன் பெறச் செய்ய வேண்டும். 

    கொரோனா தடுப்பூசி மற்றும் பொது பிரச்சினை குறித்து பேச அரசு வழங்கியுள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் கூட மருத்துவர்கள் பேசுவதில்லை. ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவாய் துறை, மின்சார துறை அலுவலர்கள் யாரும் வருவதில்லை. யாரிடம் குறை நிறைகளை தெரிவித்து பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என தெரியவில்லை என்றார். 

    வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு பேசுகையில்:

    பல்லடம் ஒன்றியத்தில் 85 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2600 மாணவ, மாணவிகள் விலகி அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். கணபதிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மட்டும் அதிகபட்சமாக 705 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். 

    அதனால் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. அரசு பள்ளிகளில் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றார். 

    ஒன்றியகுழு தலைவர் தேன்மொழி பேசுகையில்:

    பல்லடம் ஒன்றியத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஒன்றிய நிர்வாகம் முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும். பழுதடைந்த அரசு கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அகற்றப்படும். 

    தேவைப்படும் இடங்களில் சத்துணவு கூடம், வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கேற்ப அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×