search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலா பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

    சென்னையின் பல இடங்களில் அ.ம.மு.க.வினர் சசிகலாவின் பிறந்தநாளை கொடி, தோரணங்களை கட்டி கொண்டாடி வருகிறார்கள்.
    சென்னை:

    சட்டமன்ற தேர்தலையொட்டி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடாமல் முதலில் ஒதுங்கினார்.

    இந்தநிலையில் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வினர் மற்றும் தனது ஆதரவாளர்கள் இடையே தொலைபேசியில் சசிகலா உரையாடும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில் அவர் விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன். கட்சியை காப்பாற்றிவிடலாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

    சசிகலாவுக்கு இன்று 67-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரில் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து கடிதம் வாயிலாகவும், தொலைபேசியின் மூலமாகவும் பலர் என்னிடம் கேட்டுள்ளீர்கள். கொரோனா பரவல் காரணமாக யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்’’ என்று கூறி இருந்தார்.

    இருப்பினும் இன்று டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், சசிகலாவின் ஆதரவாளர்களும் தி.நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்றனர்.

    அங்கு பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், மொளச்சூர் பெருமாள், நடிகர் விக்னேஷ் மற்றும் பலர் பூங்கொத்து கொடுத்து விட்டு சென்றனர்.

    சசிகலா பிறந்தநாளையொட்டி இன்று கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை இளங்காளியம்மன், கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அவரது ஆதரவாளர்கள் சசிகலா பெயரில் சிறப்பு பூஜைகளை செய்தனர். ஆதரவற்றோர் இல்லங்களில் உதவிகளும் செய்யப்பட்டன.

    இதுதவிர சென்னையின் பல இடங்களில் அ.ம.மு.க.வினர் சசிகலாவின் பிறந்தநாளை கொடி, தோரணங்களை கட்டியும் கொண்டாடி வருகிறார்கள். ஒலிபெருக்கிகளை வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்களையும் ஒலிபரப்பினர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை சசிகலா ஆதரவாளர்கள் இன்று வெளிப்படுத்தினார்கள்.

    Next Story
    ×