search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் பைக் டாக்சிக்கு விரைவில் அனுமதி

    மத்திய அரசு பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் விரைவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை வாடகை வாகனங்களாக பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
    சென்னை:

    பைக் டாக்சிக்கு மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் பைக் டாக்சிக்கு இதுவரை அனுமதி இல்லாமல் இருந்த நிலையில் விரைவில் அதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘மோட்டார் வாகன சட்டங்களின் படி இருசக்கர வாகனங்கள் வாடகை வாகனங்களாக கருதப்படாது. இதனால் அதற்கு வாடகை வாகனங்களுக்கான மஞ்சள் நம்பர் போர்டுகள் வழங்க முடியாத நிலை இருந்தது’’ என்று தெரிவித்தார்.

    மத்திய அரசு பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் விரைவில் பொதுமக்கள் மோட்டார்சைக்கிளை வாடகை வாகனங்களாக பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

    அப்போது மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்படும்.

    இதுதொடர்பாக விரைவில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    தற்போது கோவா உள்ளிட்ட சில சுற்றுலா இடங்களில் பைக் டாக்சிக்கு அனுமதி இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    தமிழகத்தில் சுமார் 2.5 கோடி மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு 1 கோடியே 70 லட்சம் மோட்டார்சைக்கிள்களே இருந்துள்ளன. சென்னையில் மட்டும் 47.5 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் ஓடுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 18 லட்சமாக இருந்துள்ளது.

    மோட்டார்சைக்கிள் விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் இது கடந்த 5 ஆண்டுகளில் மோட்டார்சைக்கிள் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வந்துள்ளது. 2016-ம் ஆண்டு 5 ஆயிரத்து 656 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது படிப்படியாக குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டு 5,322 பேரும், 2018-ம் ஆண்டு 3,965 பேரும், 2019-ம் ஆண்டு 3,537 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு உயிர் பலி குறைந்துள்ளது. 2,997 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

    ஹெல்மெட் அணிவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பைக் டாக்சி அமலுக்கு வரும் போது அதை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என்றும், பைக் டாக்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×