search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காண்டிராக்டர் வெற்றிவேலின் வீடு
    X
    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காண்டிராக்டர் வெற்றிவேலின் வீடு

    சென்னை காண்டிராக்டர் வீட்டில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் சிக்கியது- தந்தை வீட்டில் சோதனை

    எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது காண்டிராக்டர் வெற்றிவேல் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அவருடன் யார் - யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களது வீடுகளிலும் தற்போது சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    அந்த வகையில் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னையில் மாநகராட்சி காண்டிராக்டர் வெற்றிவேல் என்பவரது வீட்டில் சோதனை தொடங்கியது.

    எம்.ஜி.ஆர்.நகர் 10-வது தெருவை ஒட்டியுள்ள வள்ளல்பாரி தெருவில் உள்ள வெற்றிவேலின் வீட்டில் நடைபெற்ற சோதனை நேற்று இரவு முழுவதும் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 6.30 மணி அளவில்தான் சோதனை நிறைவடைந்தது. 14 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது காண்டிராக்டர் வெற்றிவேலின் வீட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கி உள்ளது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    எஸ்பி வேலுமணி

    எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது காண்டிராக்டர் வெற்றிவேல் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடந்துள்ளது.

    இந்த நிலையில் காண்டிராக்டர் வெற்றிவேலின் தந்தை துலுக்கானந்தம் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நகர், சூளை பள்ளத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காண்டிராக்டர் வெற்றிவேலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அவரது தந்தை வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×