search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மத்திய அரசின் சலுகை நீட்டிப்பு - திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

    இந்திய ஏற்றுமதி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடி என்கிற இலக்கை எட்டுவதற்கு இத்தகைய சலுகைகள் கைகொடுக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    சர்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர்கொள்ள ஏதுவாக இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., (ரிபேட் ஆப் ஸ்டேட் அன்ட் சென்ட்ரல் லெவிஸ் அன்ட் டேக்ஸஸ்) என்கிற சலுகை வழங்குகிறது. 

    இச்சலுகை காலம் கடந்த 2020 டிசம்பருடன் முடிவடைந்தது. கால நீட்டிப்பு செய்யப்படாததால் இந்த திட்டத்தில் சலுகை பெறமுடியாமல் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் தவித்தனர். இச்சலுகையை தொடர வேண்டும் என திருப்பூர் பகுதி ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனால் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகையை நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் வரும் 2024 மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய ஜவுளித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறுகையில், நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகைகள் கடந்த 2020 டிசம்பர் 31-ந் தேதி வரை வழங்கப்பட்டது. அதன்பின் இச்சலுகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

    இச்சலுகையை தொடர வேண்டுமென பிரதமர் மோடி, நிதி அமைச்சர் மற்றும் ஜவுளி அமைச்சக அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை  வரும் 2024 மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

    இதற்காக பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. இதனால் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி பெறுவதோடு  வேலைவாய்ப்பும் பெருகும். இந்திய ஏற்றுமதி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடி என்கிற இலக்கை எட்டுவதற்கு இத்தகைய சலுகைகள் கைகொடுக்கும் என்றார். 

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகை தொடர வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஸ்திரத்தன்மையுடன் இச்சலுகை திட்டம் தொடரும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

    ஆனாலும் அரசிதழில் அறிவிப்பு வெளியாகாததால் சலுகை பெறமுடியாத நிலையே நீடித்தது. மீண்டும் கோரிக்கை வைத்ததால் ஜவுளித்துறை அமைச்சகம், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கடந்த ஜனவரி முதலான7 மாதங்களுக்கான சலுகை தொகை விரைவில் ஏற்றுமதியாளர்களை வந்தடைய உள்ளது. நிதி பற்றாக்குறையால் தவிக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சிறிய தீர்வு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×