search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
    X
    மாவட்ட விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

    திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
    திண்டுக்கல்:

    இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் தேசிய கொடியேற்றி சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல்வேறு அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

    இதுதவிர சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா நடைபெறும் மேடையில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சண்முகஆனந்த், செந்தில்குமார், வெங்கிடு, கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விளையாட்டு மைதானம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    மேலும் திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

    சுதந்திரதின விழாவில் நடைபெறும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காவலர்களின் அணிவகுப்பும் நடக்காது. மாவட்ட கலெக்டர் தனி வாகனத்தில் சென்று காவலர்கள் வரிசையாக இருக்கும் அணி வகுப்பை பார்வையிட்டு திரும்புவார். இதேபோல கொரோனா பரவல் காரணமாக சுந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று நினைவு பரிசு மற்றும் பொன்னாடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×