search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை
    X
    பள்ளிக்கல்வித்துறை

    பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் வரை பாடங்கள் குறைப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    முன்னுரிமை பெற்ற பாடங்களின் தலைப்புகள் மட்டுமே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும்.
    சென்னை:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் சில குறிப்பிட்ட அளவு பாடங்கள் குறைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது பாடங்கள் குறைப்பு தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.

    அந்த அறிவிப்பின் படி, 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் பாடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கல்வித்துறைக்கான கல்வியாண்டு பொதுவாக ஜூன் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை செல்லும். அந்தவகையில் மொத்த வேலை நாட்கள் 210. கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான கற்பித்தல், கற்றல் நாட்கள் இருந்தன. இருந்தபோதிலும் கல்வி தொலைக்காட்சி, தனியார் சேனல்கள் மூலம் பாடங்கள் வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டன.

    மாணவர்களின் கற்றலை உறுதிசெய்ய அரசு எடுத்த நல்ல தரமான நடவடிக்கை இருந்தபோதிலும், முழு கல்வியாண்டில் ஓரளவு கற்றல் இழப்பு ஏற்பட்டது. தற்போது நோய்த்தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையையும், நேரடி வகுப்பறையில் உள்ள இடைவெளியையும் கருத்தில் கொண்டு, முழு கல்வியாண்டுக்கு வடிவமைக்கப்பட்ட அனைத்து பாடப்பகுதிகளையும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாது.

    எனவே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் கடந்த ஆண்டை போல எந்தெந்த பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடங்கள் குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளது.

    அந்தவகையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 முதல் 54 சதவீதம் வரையிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரையிலும் பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைத்தது.

    அந்த பரிந்துரையை பரிசீலித்து சில ஆணைகளை பள்ளிக்கல்வி ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, பள்ளிகள் திறக்கப்படும்போது, கல்வியாண்டின் கற்றல் இழப்பை போக்க அனைத்து வகுப்புகளுக்கு 45 முதல் 50 நாட்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பாடநெறியையும், பிரிட்ஜ் பாடநெறியையும் நடத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முன்னுரிமை பாடங்கள் நடப்பு கல்வியாண்டிற்கும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    தேர்வு

    முன்னுரிமை பெற்ற பாடங்களின் தலைப்புகள் மட்டுமே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வு உள்பட இதர தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தேர்வுகளின் பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி, அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


    Next Story
    ×