search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இன்று 30 பஸ் போக்குவரத்து புதியதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
    X
    சென்னையில் இன்று 30 பஸ் போக்குவரத்து புதியதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

    சென்னை புறநகர் பகுதிகளை இணைக்க கூடுதலாக புதிய வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், சேகர் பாபு ஆகியோரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கடந்த ஆட்சியில் ஒருசில வழித்தடங்களில் இயக்கப்பட்ட சென்னை புறநகர் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. பயணிகள் கூட்டம் இல்லாததால், நஷ்டம் ஏற்பட்டதால் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு வரக்கூடிய மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    அதே நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்க கூடுதலாக புதிய வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், சேகர் பாபு ஆகியோரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.

    அதன் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மட்டுமின்றி ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்களையும் இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி சென்னையில் இன்று 30 பஸ் போக்குவரத்து புதியதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் இருந்து 23 பஸ் சேவையும், வடசென்னையில் இருந்து 7 பஸ் சேவையும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 சதவீதம் பெண்கள் பஸ்களை பயன்படுத்துகின்றனர் என்ற அடிப்படையில் இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 61 சதவீதம் பெண்கள் இலவச பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அரசு பேருந்துகள்

    இதுவரை 9.20 கோடி பெண்கள் இலவச பயணம் மூலம் பயனடைந்து உள்ளனர். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் கூடுதலாக 150 கோடி நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

    தமிழகத்தில் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் சென்றாலும், பஸ் கட்டண உயர்வு என்பது தற்போதைக்கு இல்லை. பேருந்து நிலையங்களில் விற்கப்பட்ட அம்மா குடிநீர் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிதி சுமை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களின் சேவைக்காக செயல்படுவோம். போக்குவரத்துத்துறை புதிய பொலிவுடன் இனி செயல்படும்.

    வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×