search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை உள்ளூர் டாக்டர்களுக்கு மட்டும் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்- ராமதாஸ்

    தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்தார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் செலவில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்த பிற மாநில மருத்துவர்கள், ஒப்பந்தப்படி தமிழ்நாட்டில் பணி செய்ய முன்வராமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 19 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது.

    அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அதனால் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதனால் தமிழக மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    தமிழ்நாடு அதன் மக்களின் வரிப்பணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, அவற்றில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை நடத்துகிறது. ஆனால், அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள் தான் படிப்பர் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதை பிற மாநில மாணவர்களுக்கு மத்திய அரசு தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயம்?

    ஒரு வேளை மருத்துவக் கட்டமைப்பு இல்லாத மாநில மருத்துவர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவவும், ஊக்குவிக்கவும் வேண்டும். மாறாக, பிற மாநிலங்களின் மருத்துவக் கட்டமைப்புகளை ஆக்கிரமிப்பது நியாயமல்ல.

    இந்த அநீதிக்கு முடிவு கட்ட 2017-ம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போன்று, தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் அதிகாரம் தமிழக அரசிடமே வழங்கப்பட வேண்டும்; 50 சதவீத இடங்கள் உள்ளூர் அரசு டாக்டர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×