search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கருணாநிதி படத்தை வீடுகளில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழ் மொழியில் மிகச் சிறந்தவராக விளங்கிய கருணாநிதி தனது அரசியல் எதிரிகளையும் கவர்ந்தார் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற வைர நெஞ்சம் கொண்ட தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த, பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும் அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.

    தமிழே மூச்சாக தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு, 80 ஆண்டுகளைக் கடந்த பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழ்நாட்டை வளம் பெறச் செய்து, இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதயசூரியனாகத் திகழ்ந்த மகத்தான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    நாம் மட்டும் அவரைப் போற்றவில்லை. நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடுச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததைக் கண்டோம்.

    “இந்தப் புகழ்பெற்ற மண்டபத்தில், தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இனி இருக்கும்.

    தமிழ் செம்மொழியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி. கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்” என புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர்.

    கருணாநிதி

    சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திறப்பு விழாவுக்கும் தலைமை வகித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பன்முகத்தன்மையையும் அவற்றின் சிறப்பியல்புகளையும் எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

    “பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முறையாகத் தீர்வு காணக்கூடியவராக, எத்தகைய கடினமான சிக்கல் வாய்ந்த பிரச்சனைகளாக இருந்தபோதும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவராக கலைஞர் விளங்கினார். நிர்வாகத் திறமை மிக்கவராகவும் இந்த பெரும் அவையில் விவாதங்களில் திறன்பட பங்காற்றியவராகவும் அவர் விளங்கினார்.

    தமிழ் மொழியில் மிகச் சிறந்தவராக விளங்கிய அவர் தனது அரசியல் எதிரிகளையும் கவர்ந்தார். மக்களுக்கான முதல்-அமைச்சர் என்று சொல்லக்கூடிய வகையில் பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், குடிசை மாற்றுத் திட்டங்கள், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, சாதி ஒழிப்புக்காக சமத்துவபுரங்கள் உருவாக்கியது என ஏழ்மையில் உள்ளவர்களுக்கான பலவற்றை நிறைவேற்றியவர் கலைஞர்.

    கலைஞர் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும் பழகியுள்ளார். அனைத்து பிரதமர்களுடனும் உரையாடியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து முதல்- அமைச்சர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் முன் மாதிரியாக ரோல் மாடலாக கலைஞர் இருந்துள்ளார்” என எடுத்துரைத்தார்.

    முத்தமிழறிஞர் கலைஞரின் பொதுவாழ்வும் அவரது சாதனைகளும் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாதவை. அதைத்தான் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் எடுத்துரைத்தனர். அத்தகைய மகத்தான சிறப்பு மிக்க நம் தலைவரின் திருவுருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்து வைப்பதற்கு, அவர் மறைந்து மூன்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்திய அரசியல் தலைவர்களின் முன்மாதிரியான - ‘ரோல் மாடல்’ தலைவருக்கு, தி.மு.கழக அரசு அமைந்த பிறகுதான் சட்டமன்ற மண்டபத்தில் திருவுருவப் படம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

    அதனால்தான் அந்த விழாவில், உங்களில் ஒருவனான நான் உரையாற்றும்போது, “இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக மகிழ்கிறேன். கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்!” எனக் குறிப்பிட்டேன்.

    அந்த விழாவின் சிறப்பினை நினைக்கையில், உங்களில் ஒருவனாக கலைஞரின் உடன்பிறப்பாக ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நிர்வாகத்தினைப் பயில்கிறேன்.

    உயிர்நிகர் தலைவர் கலைஞர் நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. அவர் காட்டிய பாதை அவர் அளித்த பயிற்சி அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ஆகிய நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றேன்.

    ‘சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ எனத் தலைவர் கலைஞர் வகுத்தளித்த நெறியின் படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் பேரிடர் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு.கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன்.

    உங்களின் துணையுடனும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடனும் தலைவர் கலைஞர் வழியில் கழக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.

    உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலுசேர்க்கும். முத்தமிழறிஞர் கலைஞருக்குப் புகழ் சேர்க்கும்.

    கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை முறையாகக் கடைப்பிடித்து ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கலைஞரின் படத்தினை வைத்து -மாலையிட்டு- மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன்.

    பெருவிழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள்- ஒலி பெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞருக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×