search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்

    என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு

    திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. எனவே அரசுப் பள்ளி மாணவர்கள், தொழில் கல்வி படிப்பதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்யவும், டெல்லி ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது.

    அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மற்ற தொழில் கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமசோதா நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×