search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விலை அதிகரிப்பு, தட்டுப்பாட்டால் வெங்காய விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள்

    சின்னவெங்காய விதை தேவைக்காக பயிர்களை பராமரிக்கும் போது கலவன்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு 3 சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நடவின் போது விதையின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தாங்களாகவே விதை உற்பத்தி செய்யும் நடைமுறையை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி சாகுபடியில் குறிப்பிட்ட பாத்திகள் மட்டும் பயிர்களை அறுவடை செய்யாமல் பூக்கள் வரும் வரை பராமரிக்கின்றனர். பின்னர் பூங்கொத்தில் இருந்து விதைகளை சேகரித்து அடுத்த நடவு சீசனுக்கு பயன்படுத்துகின்றனர். சின்னவெங்காய விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ‘உழவன்’ செயலி வாயிலாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி விதை தேவைக்காக பராமரிக்கப்படும் பாத்திகளில் குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசயத்தில் இருந்து மாறுபட்டு தெரியும், எல்லா பயிர்களையும், களைகளையும், அகற்ற வேண்டும். செடிகளின் உயரம், இலை, பூங்கொத்தின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மையை கொண்டு கலவன்களை நீக்கலாம். இவ்வாறு செய்வதால், உண்மையான விதை நல்ல தரமானதாக கிடைப்பதுடன் ரகத்தின் பாரம்பரிய தன்மைகளை பாதுகாக்கலாம்.

    விதை அறுவடை தருணத்தில் பூங்கொத்தில் 50 சதவீத கருப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில் பூங்கொத்துகளை மட்டும் அறுவடை செய்து சாக்கு பைகளின் மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும். இவ்வாறு பல ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×