search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது

    சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த மாதம் சட்டசபையில் 2 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    அதன் பிறகு 3 நாட்கள் சட்டசபை நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதி நாளன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதிலளித்து பேசினார்.

    கடந்த மாதம் 24-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதன் பிறகு ஒவ்வொரு துறை வாரியாக முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினார்.

    சுமார் 30 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முக ஸ்டாலின்

    பொதுவாக அமைச்சரவை கூடி முடிவெடுத்த 10 நாட்களுக்குள் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் வருகிற 13-ந்தேதி பட்ஜெட்டும், 16-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அதற்கு பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரை ஆரம்பிக்கலாமா? அல்லது அதற்கு 2 நாட்களுக்கு முன்பு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாமா? என்பது குறித்து நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த மாதம் சட்டசபையில் 2 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொது பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    முதல் முறையாக வேளாண்மைக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறும் என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர்.

    வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை பட்ஜெட் தயாரிக்க விவசாயிகள், விவசாய நிபுணர்கள், விவசாய சங்கங்கள் ஆகியோரையும் கலந்து ஆலோசித்து விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ப உரிய பலன்களை பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கியும் வேளாண்மை பட்ஜெட் அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளார்.

    அதன் அடிப்படையில் வேளாண்மை பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் பொது பட்ஜெட்டுக்காக நிதி நிலை வல்லுனர்கள், பெரும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், சிறு- குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து அவர்களிடம் பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறந்த பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் நிதி அமைச்சரும், உயர் அதிகாரிகளும் பட்ஜெட்டை தயார் செய்து வருகிறார்கள்.

    இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே போல் ஏழை விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Next Story
    ×