search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஆய்வு நடத்திய கலெக்டர் அனீஷ்சேகர்
    X
    மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஆய்வு நடத்திய கலெக்டர் அனீஷ்சேகர்

    மதுரை மாட்டுத்தாவணி-பரவை மார்க்கெட்டுகளில் சில்லறை விற்பனைக்கு தடை

    அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வணிக நிறுவனம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அவரும் நேரிடையாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு ஏராளமானோர் பூ வாங்க வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. வியாபாரிகள் முகக்கவசம் அணியவில்லை.

    எனவே உடனடியாக அந்த பூ மார்க்கெட்டினை மூடுவதற்கு உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள மொத்த கடைகள் மட்டும் ஆம்னி பஸ் நிலையத்தில் செயல்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றி மார்க்கெட் மூடப்பட்டது.

    பின்னர் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பல கடைகளில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை.

    எனவே வடக்கு மாசி மற்றும் விளக்குத்தூண் பகுதியில் உள்ள 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், மேலமாசி வீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ரூ.5 ஆயிரமும், நேதாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ரூ.2 ஆயிரம், பஜாரில் வெள்ளி கடைக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தார்.

    பின்னர் இது தொடர்பாக கலெக்டர் அனிஷ் சேகர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெளி வீதிகள், மாசி வீதிகள், சித்திரை வீதிகள், கோரிப்பாளையம், அரசரடி, காளவாசல், பைபாஸ் சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் எதிர்வரும் நாட்களில் ஜவுளி கடைகள், பெரிய கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்பு உள்ளது. எனவே அரசின் நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வணிக நிறுவனம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.

    மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, பழச்சந்தை, பூ மார்க்கெட், பரவை காய்கறி சந்தைகளில் சில்லறை விற்பனை தடை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். சந்தைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். அரசின் நிலையான விதிகளை பின்பற்றாவிட்டால் சந்தைகள் மூடப்படும். கொரோனா 3-ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×