search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் நேற்று கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
    X
    நாமக்கல்லில் நேற்று கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

    கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம். அருகில் சின்ராஜ் எம்.பி., தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கொரோனா 3-வது அலையால் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தற்போது உள்ள அளவிலிருந்து கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர் பிரசார இயக்கத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்து, கொரோனா விழிப்புணர்வு குறும்பட தகட்டினை வெளியிட்டார்.

    மேலும் மாவட்டந்தோறும் கலெக்டர்கள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, வருகிற 7-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் பல்வேறு துறைகளின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்திடவும், துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள், டுவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் நாமக்கல் அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதையொட்டி கலெக்டர் ஸ்ரேயா சிங், கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்பதை நான் அறிவேன், அதை தவிர்க்க பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிவேன். மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 8 அடி இடைவெளியை கடைபிடிப்பேன் என்கிற உறுதிமொழியை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, உழவர் சந்தை, கோட்டை ரோடு வழியாக சேலம் சாலை முருகன் கோவில் அருகே நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டோர் முககவசம் அணிவோம், வரும் முன் காப்போம், கொரோனாவை வெல்வோம், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை செல்வோம், சோப்பினால் அடிக்கடி கைகளை கழுவுவோம் என்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி முழக்கமிட்டு சென்றனர்.

    பின்னர் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் டாக்டர் ரங்கநாதன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×