search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்நாத் கோவிந்த்
    X
    ராம்நாத் கோவிந்த்

    சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    சென்னை:

    சட்டசபை நூற்றாண்டு விழா தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை 9.35 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டார். 9.50 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

    10 மணிக்கு அவரது தனி விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு ஜனாதிபதியின் விமானம் மதியம் 12.45 மணிக்கு வந்து சேர்ந்தது.

    சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

    பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு  புறப்பட்டு சென்றார்.  

    இன்று மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி புறப்பட்டு தலைமை செயலகத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    4.50 மணிக்கு அவர் சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சிறிது நேரம் கவர்னர் பன்வாரிலால், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசுவார். அதன் பிறகு சட்டப்பேரவை மண்டபத்துக்கு அவர்கள் செல்வார்கள். அங்கு நூற்றாண்டு விழா தொடங்கி நடைபெறும்.

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை சட்ட சபை நூற்றாண்டுவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதலில் 5.02 மணிக்கு தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப் படுகிறது. மாலை 5.07 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வரவேற்று பேசுகிறார்.

    மாலை 5.12 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்வார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு சிறப்பு செய்வார்.

    5.15 மணிக்கு  சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி திறந்து வைப்பார். மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

    மாலை 5.30 மணிக்கு விழாவுக்கு தலைமை தாங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை உரை நிகழ்த்துகிறார். மாலை 5.40 மணிக்கு தலைமை விருந்தினரும், ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த் விழா பேருரை ஆற்றுகிறார். மாலை 5.50 மணிக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றுகிறார். நிறைவாக  5.55 மணிக்கு தேசிய கீதம் இசைக்க விழா முடிவடையும்.

    6 மணிக்கு ஜனாதிபதி தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து புறப்படுவார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வழி அனுப்பி வைப்பார்கள். 6.15 மணிக்கு ஜனாதிபதி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றடைவார்.

    அங்கு இன்று இரவு கவர்னர் தங்க உள்ளார். நாளை காலை 10.15 மணிக்கு அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு செல்ல இருக்கிறார்.

    சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு  விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது. ‘‘தமிழ் வாழ்க’’ என்ற பதாகை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    கருணாநிதி

    தலைமைச் செயலகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. திரும்பிய திசை எல்லாம் அலங்காரங்கள் செய்யப்பட்டு புத்துணர்ச்சி பொங்க சட்டசபை வளாகம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தலைமைச் செயலகம் இன்று கோலாகல விழாவை காணுகிறது.

    ஜனாதிபதி, கவர்னர், முதல்- அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தருவதால் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பங்கேற்கும் இடங்கள் மத்திய பாதுகாப்புப்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் இன்று மாலை 4 மணிக்குள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அடையாள அட்டை வைத்து இருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தலைமைச் செயலகத்துக்கு வந்த அனைவரும் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    விழாவில் பாதுகாப்பை முன்னிட்டு தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் இன்று மதியம் 1 மணிக்கே புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×