search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4,651 பேருக்கு கொரோனா பரிசோதனை

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 34 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிப்பு உச்சத்தில் இருந்த கடந்த மே மாதத்தில் மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் குறையத்தொடங்கியது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் குறைந்தது.

    கடந்த 26-ந்தேதி 14 பேரே பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நேற்று சற்று உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 34 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    மேல்புறத்தில் 8 பேருக்கும், ராஜாக்கமங்கலம் மற்றும் கிள்ளியூரில் தலா 6 பேருக்கும், தக்கலையில் 4 பேருக்கும், நாகர்கோவில், தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் தலா 2பேருக்கும் தொற்று பாதித்துள்ளது. மேலும் நெல்லையில் இருந்து வந்த 3பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    அவர்களில் 9 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள் ஆவர். மேலும் அதில் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர். வெகுநாட்களாக குழந்தைகள் பாதிக்கப்படாத நிலையில் நேற்று 3 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

    மேலும் தினமும் ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவல் குறைவாக இருந்தபோதிலும், குமரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 651 பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4 ஆயிரத்து 617 பேருக்கு பரிசோதனை முடிவு “நெகட்டிவ்” என்று வந்திருக்கிறது.

    குமரி மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியே பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் நேரடி முறையில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 71 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    நேரடி டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்ட 60 மையங்களில், 29 மையங்களில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல் சர்க்கரை நோய் மற்றும் அதன் இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் பல மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. நாகர்கோவில் நகரில் பல இடங்களுக்கு மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் நேரடியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். பெருவிளை மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் மீனாட்சிபுரம் பணிமனையில் வைத்து இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×