search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?

    திறமை இருந்தும் முறையான பயிற்சி இல்லாததால், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளில் கூட திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கானல் நீராகி வருகிறது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் 850-க்கும் அதிகமான துவக்கப்பள்ளிகள், 290-க்கும் அதிகமான நடுநிலை 96 உயர்நிலை மற்றும் 87 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இதில் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில்  இயல்பாகவே திறமைகளை கொண்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு போதுமான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் ஆகியவை எட்டாக்கனியாகவே உள்ளது. 

    திறமை இருந்தும் முறையான பயிற்சி இல்லாததால், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளில் கூட திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கானல் நீராகி வருகிறது. மாநில அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட வேண்டும். 

    இந்த வளாகத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கான மைதானங்கள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆனால் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் போதுமான கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. 

    மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டது. அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பல வகையான போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வதில் பயிற்சியாளர் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற மாணவர்கள் கபடி, ஆக்கி, நீச்சல் போன்ற விளையாட்டுகளில் திறன் பெற்றவர்களாக உள்ளனர். எனவே மாவட்ட விளையாட்டு வளாகம், உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம், ஆக்கி விளையாட்டிற்கு செயற்கை புல் மைதானம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பயிற்சியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி  முறையாக பயிற்சியளித்தால் மாணவர்கள், இளைஞர்கள் திசைமாறுவதை தவிர்த்து மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களை திருப்பூர் மாவட்டத்திலும் உருவாக்க முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×