search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது

    சட்டசபை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழா முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

    இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள்ளாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி உள்ளது.

    தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு சாவடிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    76 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறையில் 35 பக்கங்களில் வாக்குச்சாவடி அமைப்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா
    நோய் தொற்று காலம் என்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்கும்படி வாக்காளர் பட்டியலையும், வாக்குச்சாவடிகளையும் உருவாக்க வேண்டும்.

    ஒரு வார்டில் 400 வாக்காளர்களுக்கு குறைவாக இருந்தால் அந்த வார்டுக்கு என தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டியது இல்லை. அருகில் உள்ள மற்றொரு வார்டுடன் சேர்த்து வாக்குச்சாவடி அமைக்கலாம்.

    ஒரு கிராம ஊராட்சி வார்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 1000-க்கு மேல் இருந்தால், உள்ளூர் நிலைமைக்கேற்ப அந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைத்திடலாம். அவ்வாறு அமைக்கும்போது குக்கிராமம் அல்லது பிளாக் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு ஒவ்வொரு பிளாக்கிலும் சுமார் 600 முதல் 1000 வரை வாக்காளர்கள் இருந்தால் அந்த பிளாக்குகளுக்கு பிற நிபந்தனைகளுக்கு ஏற்ப தனித்தனியே வாக்குச்சாவடிகள் அமைக்கலாம்.

    இருப்பினும், இட வசதி மற்றும் ஏனைய நிபந்தனைகளுக்கு ஏற்ப ஒரே கட்டிடத்தில் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கலாம். ஒரே கட்டிடத்தில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்க நேர்ந்தால் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே வாக்குச்சாவடிகளை அமைக்கலாம்.

    ஒரு வாக்காளர் வாக்குச்சாவடியை சென்றடைய இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் பயணம் செய்யாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மத உணர்வுகளை பாதிக்கக்கூடிய அல்லது சமுதாய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடிய இடத்திலோ அல்லது அருகிலோ வாக்குச்சாவடிகள் அமைக்க கூடாது. எனவே வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது முழுமையான கவனத்துடன் பணிபுரிய வேண்டும்.

    சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு முன்னுரிமை தந்து அந்த கட்டிடங்களிலேயே வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும். தனியார் கட்டிடங்களில் வாக்குச்சாவடிகளை அமைத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல்

    உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கவனத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். பக்கம் வாரியாக சரியாக அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    அச்சிடப்பட்ட பிரதிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணிகளை சரி பார்க்க உரிய அலுவலர்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை தனியாரிடம் கொடுக்க கூடாது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டிடத்திலும் நுழைவு வாயில் தனியாக இருக்க வேண்டும். அது போல வாக்காளர்கள் வெளியேறுவதற்கு தனித்தனி வழிகள் இருக்க வேண்டும்.

    முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    9 மாவட்டங்களில் ஊரக
    உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் விரைவில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்தபட்சம் 30 நாட் களுக்கு முன்பாக தேர்தல் குறித்த அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதன்படி செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி பார்த்தால், தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள்ளாக வெளியிட வேண்டும்.

    எனவே சட்டசபை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழா முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.

    Next Story
    ×