search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    மாணவ-மாணவிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிவிட்டு மாணவ-மாணவிகளை தி.மு.க. அரசு வஞ்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    சேலம்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வீட்டின் முன்பு கையில் பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பினர், தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் போராட்டம் செய்தனர்.

    அப்போது அவர்கள், மு.க.ஸ்டாலின் அரசே என்னாச்சு என்னாச்சு தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு, வஞ்சிக்காத வஞ்சிக்காதே வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே, ரத்து செய், ரத்து செய் மாநில அரசே நீட் தேர்வை ரத்து செய். ஏமாற்றாதே, ஏமாற்றதே மாணவ- மாணவிகளை ஏமாற்றதே.

    தள்ளுபடி செய், தள்ளுபடி செய் மாணவர்களின் கல்வி கடன், நகைகடன், மகளிர்சுய உதவி கடன், தள்ளுபடி செய், நிறைவேற்றிடு, நிறைவேற்றிடு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடு, என பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கேள்வி: சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என சொல்லி உள்ளது?

    பதில்: உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டது. அப்படி இருக்கும்போது எப்படி கால அவகாசம் கிடைக்கும். உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும். நீங்கள் (தி.மு.க.) ஏன் பொய் சொல்கிறீங்க என்று தான் கேட்கிறோம்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி கொடுத்தது தி.மு.க., மு.க.ஸ்டாலின் ஏன் மக்களை குழப்புகிறீர்கள். ஏன் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்களை குழப்புகிறீர்கள். ஏன் அவர்களை வஞ்சிக்கின்றீர்கள். உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டது. அது நன்றாக அனைவருக்கும் தெரியும். தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் தெரியும், முதல்-அமைச்சருக்கும் தெரியும்.

    ஆகவே வேண்டும் என்றே திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறுவதற்காக இந்த அறிவிப்பை கொடுத்தார்கள். அதனால் தான் நாங்கள் திருப்பி திருப்பி கேட்கின்றோம்.

     நீட் தேர்வு வந்து விட்டது. ஆனால் அவர்கள் இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் கருத்து சொல்லித்தானே ஆகவேண்டும். இதுவரைக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நான், ஆளுநர் உரையின்போது இது பற்றி கேட்டேன்.

    கேள்வி: பெட்ரோல்- டீசல் விலை உயர்வு பற்றி?

    பதில்: பெட்ரோல்- டீசல் விலையை குறைப்போம் என்று தெரிவித்தார்கள். ஏன் இன்னும் குறைக்கவில்லை. அதற்கு கேட்டால், எங்களுக்கு இன்னும் 5 ஆண்டுகாலம் இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படி சொல்லியா வாக்குகள் கேட்டார்கள். இல்லையே.

    ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தீர்கள். அது என்னாச்சு என்பதால் நாங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூலமாக இந்த அரசுக்கு வைக்கின்ற கோரிக்கை.

    கேள்வி: கொரோனா பரவல் தீவிரம் காரணமாக அதில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?

    பதில்: எங்கள் ஆட்சி காலத்திலும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. எங்களுடைய ஆட்சியில் செய்து வைத்திருந்ததைதான் அவர்கள் இப்போது செய்கிறார்கள். புதிதாக அவர்கள் எதையும் செய்யவில்லை.

    முதன் முதலாக கொரோனா வந்தபோது ஆட்சியில் அம்மாவுடைய அரசு தான் இருந்தது. கொரோனா எப்படி வரும், அது எப்படி தாக்கும் என சரியான முறையில் கையாண்டு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முதன்மை அரசு அம்மாவுடைய அரசு என்பதை பாரத பிரதமரே பாராட்டினார்.

    கேள்வி: ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்களே?

    பதில்: இப்போது அவர், ஊழல் அமைச்சரை தானே வைத்திருக்கிறார். கோர்ட்டுக்கு போகிறார் அல்லவா. நீங்கள் அமைச்சராக இருந்தாலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றமே சொல்லி இருக்கிறதே.

    ஏற்கனவே அம்மா இருந்தபோது தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை மறந்து ஸ்டாலின் பேசிகொண்டு இருக்கிறார்.

    கேள்வி: வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி?

    பதில்: பெரும்பான்மை சமுதாய மக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதை பரிசீலனை செய்து நாங்கள் சட்டசபையில் அறிவித்தோம். நாங்கள் தான் 10.5 சதவீத இடஒதுக்கீடை கொடுத்தோம்.

    ஏற்கனவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த அரசாங்கம் இதை செயல்படுத்தினால் இதற்கு விடிவு காலம் பிறகும்.

    சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெற்றால் ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என கணக்கீட்டு அதை வெளியிட்டால், அனைவருக்கும் பிரச்சனையே இருக்காது. அதை இப்போது இருக்கின்ற ஸ்டாலின் அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Next Story
    ×