search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்ற மேலும் 3 பேர் கைது

    கோவையில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்ற மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் இளைஞர்கள் மத்தியில் போதை ஊசி கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இளைஞர்களை குறிவைத்து சிலர் வலி நிவாரணிக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த கும்பலை பிடிப்பதற்காக மாநகரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் மற்றும் பயன்படுத்தும் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஒண்டிப்புதூர் தனியார் குடியிருப்பு அருகே சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த அம்மன்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 21), ஒண்டிப்புதூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (21), ராஜா என்கிற இஸ்ரவேல் (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரைகள், ஒரு குளுக்கோஸ் பாட்டில், 55 ஊசி மற்றும் ரூ. 500 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் மருந்து கடைகளில் இருந்து வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்கு அடிமையாகி உள்ள இளைஞர்களிடம் ரூ. 500-க்கு விற்பனை செய்வதற்காக வைத்து இருந்ததாக தெரிவித்தனர். மேலும் இவர்களிடம் கோவை நகரில் யார்? யாரெல்லாம் போதை மாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள் என்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை வைத்து போலீசார் போதை மாத்திரை கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×