search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் படிப்புக்கு 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் 99,600 இடங்கள் கிடைக்கின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

    ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்தனர்.

    நேற்று இரண்டாம் நாள் வரை 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்தனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக கிடந்தன. இந்த வருடம் அதை விட கூடுதலான இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    கொரோனா பாதிப்பால் தொழில் பாதிக்கப்பட்டும், வேலை இழந்ததால் பலருக்கு வருமானம் இல்லாமலும் போனது. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிக செலவு செய்து பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    கலை அறிவியல் கல்லூரிகளில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.

    இதற்கிடையில் இந்த வருடம் 16 பொறியியல் கல்லூரிகளை மூட விருப்பம் தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் சேராததால் கல்லூரியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவர் சேர்க்கை போதுமான அளவு இல்லாததால் தொடர்ந்து கல்லூரியை நடத்த முடியவில்லை. அதனால் இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு முன்பே தங்கள் கல்லூரிகளை அந்த பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு 17 கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது 16 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பொறியியல் இடங்கள் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் 99,600 இடங்கள் கிடைக்கின்றன. இக்கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது.

    www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையவழி மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆகஸ்டு 10-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல்நாளிலேயே 61 ஆயிரம் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தனர்.

    2-வது நாளான நேற்று விண்ணப்ப பதிவு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தனர். இந்த ஆண்டில் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் கடந்த ஆண்டைவிட விண்ணப்பம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விண்ணப்ப பதிவு தொடங்கிய 2 நாளில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அருகே இருக்கும் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×