search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்தி அணை
    X
    திருமூர்த்தி அணை

    திருமூர்த்தி அணையில் இருந்து 3-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு

    சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பரம்பிக்குளத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    உடுமலை:

    ஆழியாறு-பரம்பிக்குளம் (பி.ஏ.பி.,) திட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு, 2  ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது பருவமழை காரணமாக காண்டூர் கால்வாயில் மண், பாறை கற்கள் சரிவுகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பரம்பிக்குளத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் அணைக்கு சோலையாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    வினாடிக்கு, 6,276 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால்  கடந்த சில நாட்களாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து  மொத்தமுள்ள  72 அடி உயரத்தில் நேற்று 53.50 அடியாக  நீர்மட்டம்  உயர்ந்தது. இதனால்  4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்தநிலையில் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், நீர்வளத்துறை பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்து தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை கூட்டத்தில் நீர் இருப்பு, நீர் வரத்து, மழைப்பொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:

    திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.நான்காம் மற்றும் முதல் மண்டல பாசனத்துக்கு 5 சுற்று தண்ணீர் (மொத்தம் 9,500 மில்லியன் கனஅடி) வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆடிப்பெருக்கு நாளான வருகிற 3-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்து அரசாணை பெற தீர்மானிக்கப்பட்டது என்றார்.

    கண்காணிப்பு பொறியாளர் கூறுகையில், பி.ஏ.பி., விவசாயிகள்  நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர்.விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நாளை சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று இருப்பு வைக்கப்படும்.

    வருகிற 3-ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி தண்ணீர் திறப்பு தேதி உறுதி செய்யப்படும் என்றார்.
    Next Story
    ×