search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக விடும் விவசாயிகள்

    தொடர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் பலர் தென்னங்கன்று நடுதலை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.
    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் பல்வேறு இடங்களில் முகாமிட்டு விளைநிலத்தில் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. தற்போது தென்மேற்கு பருவமழையையொட்டி விளைநிலங்களில் புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.80ல் இருந்து ரூ.600 வரையிலான பல ரக தென்னங்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விருகல்பட்டி, பழையூர், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றிகள் தென்னங்கன்றுகளின் குருத்தை பிடுங்கி சென்று விடுகிறது. 

    குருத்து சேதமடைவதால் நடவு செய்த தென்னங்கன்றுகளை அகற்றி விட்டு புதிதாக கன்று நடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தொடர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் பலர் தென்னங்கன்று நடுதலை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காட்டுப்பன்றிகள் தென்னங்கன்றுகளை மட்டுமல்லாது பீட்ரூட், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளிலும், சேதம் ஏற்படுத்துகிறது. வரப்புகளில் வண்ண சேலை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டும் பயனில்லை.

    தொடர் சேதம் காரணமாக நிலத்தில் சாகுபடி செய்யாமல் தரிசாக விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வனத்துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×