search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடனில் சிக்கித்தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்-சம்பள உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

    ஜவுளி உற்பத்தியாளர்கள் விலைவாசி உயர்வுக்குகேற்ப கூலி வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க முடியாத நிலையுள்ளது.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் விசைத்தறி தொழில் நலிந்து தொழிலாளர் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் கடனில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் முத்துசாமி கூறியதாவது:-

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் விசைத்தறி தொழில் நலிந்து தொழிலாளர் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வேலை வாய்ப்பு, வருமானம் இழந்து விசைத்தறி தொழிலாளர்கள் தவிக்கின்றனர். கடந்த 2014ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பலமுறை மனு கொடுத்தோம். அடையாள வேலை நிறுத்தம் செய்தோம். திருப்பூர், கோவை கலெக்டர் முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் கூலி உயர்வு ஒப்பந்தம் அமலாகவில்லை.

    ஜவுளி உற்பத்தியாளர்கள் விலைவாசி உயர்வுக்குகேற்ப கூலி வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க முடியாத நிலையுள்ளது. தற்போதைய சூழலில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை நேரம் 10 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாகவும், தொழிலாளர்கள் இயக்கும் விசைத்தறி எண்ணிக்கை 8 லிருந்து 16 ஆகவும் அதிகரித்திருக்கிறதே தவிர அவர்களின் உடல் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. தினமும் ரூ.400 முதல் ரூ.500 வரை மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். 

    போதிய வருமானம் இல்லாததால் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக விசைத்தறி உரிமையாளர்களிடம் ‘அட்வான்ஸ்’ என்ற பெயரில், ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விசைத்தறி தொழிலாளர்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். எனவே முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சம்பள உயர்வு உடன்பாடு எட்டப்பட வேண்டும். 

    இத்தொழிலில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட துவங்கிய நிலையில் அவர்கள்  நலன் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×