search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாணியம்பாடி பகுதியில் வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது - 20 பவுன் நகை பறிமுதல்

    வாணியம்பாடி பகுதியில் வீடுபுகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 20 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உதவியாக இருந்த 13 வயது சிறுவனும் சிக்கினான்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மாஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டிலும் மற்றும் அதே பகுதியில் வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவர் பண்ணை வீட்டிலும் கடந்த ஏப்ரல் மாதம் மர்மநபர் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளான். அங்கு பணம், நகை மற்றும் பொருட்கள் எதுவும் இல்லாததால் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருக்கும் என எண்ணி அங்கிருந்த ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றி எரித்து உள்ளான்.

    மேலும் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் வசீம் அக்ரம் வீட்டிலும், முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த அதாவுர் ரகுமான் என்பவர் வீட்டிலும் திருட்டு நடைபெற்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வாணியம்பாடி- பெருமாள் பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த நவீத் (35) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்கண்ட இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைதுசெய்து, அவரிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல்செய்தனர். மேலும் ஆம்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனை தனக்கு துணையாக பயன்படுத்தி உள்ளார். அந்த சிறுவனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×