search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மெரினாவில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த கோவை வாலிபர் கைது

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ச்சியாக 3 முறை இதற்கு முன்பு கோவை வாலிபர் போன் செய்து மிரட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.

    அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணை கூறி அந்த எண்ணில் இருந்து அடிக்கடி ஒருவர் எனது எண்ணுக்கு பேசுகிறார். மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும் என அவர் கூறி உள்ளார்.

    எனவே அதனை தடுத்து நிறுத்துங்கள். நான் மெரினாவில் குதிரைக்கு கீழே படுத்து இருக்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றி உடனடியாக மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டும் கடற்கரையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்களை பிடித்தும் விசாரணை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி அங்கு இல்லை.

    மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கோவையில் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மெரினா போலீசார், உடனடியாக கோவைக்கு விரைந்து சென்றனர்.

    போனில் மிரட்டல் விடுத்தவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற மெரினா போலீசார், அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது அவரது பெயர் பீர்முகமது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.

    வெடிகுண்டு மிரட் டல் தொடர்பாக பீர்முகமதுவிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    போலீஸ் விசாரணையில், மிரட்டல் ஆசாமியான பீர் முகமது அடிக்கடி இது போன்று தொலைபேசியில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது தெரிய வந்தது.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ச்சியாக 3 முறை இதற்கு முன்பு அவர் போன் செய்து மிரட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பீர்முகமதுவின் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் குண்டுவெடிக்கும் என்றே அடிக்கடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல்கள் வருவது உண்டு.

    இந்த நிலையில் மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும் என கோவை வாலிபர் நேற்று இரவு விடுத்த மிரட்டலால் சென்னை மாநகர போலீசார் அதிர்ந்து போனார்கள்.

    உடனடியாக போலீஸ் படை உஷார்படுத்தப்பட்டு மெரினா முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினாவில் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. பொது மக்கள் நடமாட்டத்துக்கு மத்தியிலேயே மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இதனை மெரினாவுக்கு வந்திருந்த பொது மக்களும் மிரட்சியுடன் பார்த்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்த பிறகே போலீசாரும், பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    Next Story
    ×