search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்- பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

    தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவியது முதற்கொண்டு அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசு அந்த பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிட்டு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டது. அதற்குப் பிறகு எதிர்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த கொள்கையை மாற்றிக் கொண்டு மாநிலங்களுக்கு தேவைப்படுகிற தடுப்பூசிகளை மத்திய அரசே இலவசமாக வழங்குவது என்று ஒரு கொள்கையை அறிவித்தது.

    பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசி காலம் தாழ்ந்தே அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2021 மதிப்பீட்டின்படி 7.88 கோடி. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 ஆகும்.

    இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்த மக்கள் தொகை 6.48 கோடி. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். அங்கு தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770 பேர். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள்வது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

    இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையை தவிர்த்து தடுப்பூசி விநியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகை மற்றும் பாதிப்புகளின் அடிப்படையில் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.

    பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×