search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மிபாளையம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.
    X
    செம்மிபாளையம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.

    பூமியை பசுமை நிலப்பரப்பாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

    இயற்கை வல்லுநர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் புவி வெப்பமாவதை தடுப்பதற்காக அதிகளவில், அதாவது பூமியின் நிலப்பரப்பில் 33 சதவீதம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடனுதவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    மகளிர்களுக்கு சுய தொழில் செய்வதற்காக கடன் வழங்குவதன் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலை உயர்ந்து யாருடைய தயவு இல்லாமல் சொந்தமாக தொழில் செய்து முன்னேற்ற பாதைக்கு செல்ல வழிவகுக்கும். 

    அதேபோல் இளைஞர்களுக்கு அதிக அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களை சர்வதேச அளவில் ஒரு விளையாட்டு வீரராக அல்லது வீராங்கணையாக உருவாக்கி தமிழகத்திற்கு உலகளவில் பெருமை சேர்க்க முடியும்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதினால் இயற்கை மாசுபடிந்து பல்வேறு நோய்கள் பொதுமக்களை பாதிக்கிறது. இயற்கை மாசுபடுவதிலிருந்து பாதுகாக்க நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. இயற்கை வல்லுநர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் புவி வெப்பமாவதை தடுப்பதற்காக அதிகளவில், அதாவது பூமியின் நிலப்பரப்பில் 33 சதவீதம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

    ஆனால் தற்போது 17 சதவீதம் நிலப்பரப்பில் மட்டுமே மரங்கள் உள்ளது. எனவே அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பூமியினை பசுமை நிலப்பரப்பாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்கி தர வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், 2020-2021 நிதியாண்டில் ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.4,96,315 மதிப்பிலான 57 வகையான விளையாட்டு உபகரணங்களையும், 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் ரூ.3,60,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதியின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு சுய தொழில் தொடங்க கடனுதவிகள் என மொத்தம் ரூ.8,86,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 

    இதையடுத்து கோடாங்கிபாளையம் ஊராட்சி பெருமாள் கவுண்டன்பாளையம் பாரதி வனம் மற்றும் சங்கோதிபாளையம் ஊராட்சி மகிழ்வனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா, புண்ணியமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×