search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலாதுறை அதிகாரி அரவிந்த குமார் ஆய்வு செய்த காட்சி.
    X
    சுற்றுலாதுறை அதிகாரி அரவிந்த குமார் ஆய்வு செய்த காட்சி.

    சுற்றுலாத்துறை வளர்ச்சியில் திருப்பூர் முதலிடம் பெற நடவடிக்கை-அதிகாரி பேட்டி

    தொல்லியல் சுற்றுலா, வரலாற்று சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா இவை போன்ற சுற்றுலாக்கள் வரும் காலகட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொல்லியல் துறை சார்ந்த புராதான சின்னங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. 

    எனவே தொல்லியல் இடங்கள் மற்றும் சின்னங்களை வெளிகொண்டு வரும் நோக்கில் ஆய்வு செய்ய உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அறக்கட்டளை, தொல்லியல் ஆர்வலர்கள், உடுமலை சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர்கள் சார்பில் மாவட்ட சுற்றுலா அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் தலைமையிலான குழு உடுமலையில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். தளி பகுதியில் உள்ள திணைக்குளம் கிராமத்தில் எத்திலப்ப நாயக்கர் சம்பந்தப்பட்ட தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்தனர்.

    மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டிய கட்டபொம்மனையும் வீழ்த்திய ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் அனைத்து பகுதிகளையும் கொண்டுவரும் நோக்கில் தூதுவராக அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரோ கெதீஸ்-யை தூக்கிலேற்றிய எத்திலப்ப நாயக்கர் வீரவரலாறு உடுமலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 

    இன்றளவும் அந்த வெள்ளையனை தூக்கிலிட்ட இடமும் அதற்கு சான்றாக தூக்கிலிடப்பட்ட தூதுவரின் விவரங்களும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சான்றுகளும் தூக்கு மர தோட்டம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை தொல்லியல் வரலாற்று வளர்ச்சிக்கான ஆய்வாகவும், இதுபோன்ற வரலாற்று நிகழ்விடங்களை தொல்லியல் சார்ந்த சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    ஆய்வு செய்த பின்னர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் கூறுகையில்:

    தொல்லியல் சுற்றுலா, வரலாற்று சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா இவை போன்ற சுற்றுலாக்கள் வரும் காலகட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். கண்டிப்பாக இதுபோன்ற சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த வேண்டும். இது சுற்றுலா வளர்ச்சிக்கும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயும் உதவும். மேலும் சுற்றுலா வழிகாட்டிகள் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பொதுமக்கள் பார்வைக்கும், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கும், தொல்லியல் துறை மாணவர்களுக்கும் அதிக அளவில் தெரியவரும். 

    உடுமலையை சுற்றிலும் வரலாற்று தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. கண்டிப்பாக இந்த பகுதிகளின் வளர்ச்சி சுற்றுலா துறையில் முக்கிய அளவில் பங்காற்றும்.திருப்பூர் மாவட்டத்தை சுற்றுலா துறையின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் முதன்மை மாவட்டமாக கொண்டு வர மாவட்ட சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார். இந்த ஆய்வின் போது உடுமலை சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர்களான ஜவஹர், சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அறக்கட்டளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×