search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பூச்சிதாக்குதலை தடுக்க மிளகாயில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி

    பொதுவாக பூச்சிகளை கவர்வது பயிர்களிலிருந்து எழும் வாசனைதான்.வாசனையால் கவரப்பட்டு வரும் பூச்சிகள்தான் பயிர்களை சுவைக்க தொடங்குகிறது.
    உடுமலை:

    உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காய்கறிகள் சாகுபடியை பொறுத்தவரை பூச்சி, நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படும். எனவே தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்துகளை தெளித்து பயிர்களை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்தநிலையில் பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மிளகாயில் ஊடுபயிராகவும் வரப்பு  பயிராகவும் கத்தரி, தக்காளி போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொதுவாக பூச்சிகளை கவர்வது பயிர்களிலிருந்து எழும் வாசனைதான்.வாசனையால் கவரப்பட்டு வரும் பூச்சிகள்தான் பயிர்களை சுவைக்க தொடங்குகிறது. நமது இயற்கை விவசாயத்தில் பயிர்களின் வாசனை மற்றும் சுவையை மாற்றி பூச்சிகளை விரட்டியடிக்கும் முறையே பெருமளவில் கடைபிடிக்கப்படுகிறது.

    மேலும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பிரதானப் பயிருக்கு பாதுகாப்பளித்துள்ளனர். அந்தவகையில் நமது முன்னோர்கள் எந்தப் பயிரையும் தனிப்பயிராக சாகுபடி செய்வது கிடையாது.

    இப்போது பலரும் தனிப்பயிராக சாகுபடி செய்வதால்தான் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் இருக்கிறது. தற்போது எங்களது நிலத்தில் பாரம்பரிய இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்துள்ளோம்.

    பொதுவாக மிளகாயில் ஆரம்ப கட்டத்தில் வெட்டுக்கிளிகள் தொல்லை அதிக அளவில் இருக்கும். எனவே மிளகாய் பயிரிடும்போதே ஆங்காங்கே சிறிதளவு கீரைகளையும் பயிரிட்டு விடுகிறோம். வெட்டுக்கிளிகள் கீரைகளால் கவரப்பட்டு விடுவதால் மிளகாயை அதிக அளவில் சேதப்படுத்துவதில்லை.

    அடுத்தபடியாக ஊடுபயிராக தக்காளி, கொத்தவரை, கத்தரி போன்ற பயிர்களைப் பயிரிட்டுள்ளோம்.அத்துடன் வேலிப்பயிராக ஆமணக்கு, அகத்தி போன்றவற்றையும் பயிரிடலாம்.இவ்வாறு ஊடுபயிர் மற்றும் வரப்புப்பயிர் சாகுபடி செய்யும்போது பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் இவற்றால் கவரப்பட்டு விடுகிறது.

    இதனால் பிரதானப் பயிரான மிளகாய் பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல் செழிப்பாக வளர்கிறது. அத்துடன் ஊடுபயிர் மூலமும் ஒரு வருவாய் ஈட்ட முடிகிறது. அதையும் தாண்டி பூச்சி தாக்குதல் தென்பட்டால் மூலிகை  பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துகிறோம்.

    இவ்வாறு அனைத்துவிதமான பயிர்களிலும் நமது பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தும்போது மக்களுக்கு நஞ்சில்லா உணவுப் பொருட்களை வழங்கிய திருப்தி கிடைக்கும்.

    இவ்வாறு தொடர்ந்து இயற்கை முறையைக் கடைப்பிடிக்கும்போது படிப்படியாக அதிக மகசூலும் ஈட்ட முடியும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×