search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிண்டிங் நிறுவனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்

    கொரோனா பாதிப்பு, நூல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஆடை உற்பத்தியாளருக்கு மேலும் சுமை கொடுக்க கூடாது என்பதற்காக பிரிண்டிங் கட்டணத்தை உயர்த்தவில்லை.
    திருப்பூர்:

    கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகளில் இருந்து  திருப்பூர் ஆடை உற்பத்தி பிரிண்டிங் துறை மீண்டெழுந்து வருகிறது. தற்போது ஆர்டர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளதால் பிரிண்டிங் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் (டெக்பா) ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து  தொழிலாளர் வருகை எதிர்பார்த்த அளவில் இல்லாததால் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து தொழிலாளரும் திரும்பிவிடுவர் என எதிர்பார்க்கிறோம்.

    திருப்பூர் பிரிண்டிங் துறையை பொருத்தவரை அதிநவீன  எந்திரங்களுடன் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ளது. எத்தனை பெரிய ஆர்டர்களையும் விரைந்து முடிக்கும் ஆற்றல் உள்ளது. மிக நுட்பமான டிசைன்கள் கூட ஆடைகளில் சுலபமாக பொறிக்கப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு, நூல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஆடை உற்பத்தியாளருக்கு மேலும் சுமை கொடுக்க கூடாது என்பதற்காக பிரிண்டிங் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் பிரிண்டிங் மூலப்பொருட்கள் விலை  25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பிரிண்டிங் கட்டணத்தை வழங்க  120 நாட்களுக்கு மேல் இழுத்தடிப்பது கவலை அளிக்கிறது.

    எனவே ஆடை உற்பத்தியாளர்கள் பிரிண்டிங் கட்டணங்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.சலுகை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்  பிரிண்டிங் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்துள்ளன. ஆனால் மத்திய அரசிடமிருந்து ‘ஏ- டப்’ திட்ட சலுகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    பல்வேறு காரணங்களால் பிரிண்டிங் துறையினருக்கான ரூ.10 கோடி அளவிலான சலுகை நிலுவை உள்ளது. சலுகைகளை உடனடியாக விடுவித்தால் பிரிண்டிங் துறை அடுத்தகட்ட வளர்ச்சியை எளிதில் அடையும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×