search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பூசி-100 சதவீத இலக்கை எட்டுமா திருப்பூர்

    பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தடுப்பூசி டோக்கன்களை வழங்குவதால் ஏழை, எளியவர்கள் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.  தொடக்கத்தில் முன்களப்பணியாளர்கள் கூட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு அச்சப்பட்டனர். 

    ஆனால் இந்தநிலை தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து மாறியது. முன்களப்பணியாளர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்த  தொடங்கினர். 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டபோதும்  திருப்பூரில் தொடக்கத்தில் தடுப்பூசி முகாம்கள் காற்று வாங்கின.  

    ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படுவதற்கு ஒரு சில வாரங்கள் முன்பிருந்தே திருப்பூரில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது. 

    இந்தநிலையில் திருப்பூரில் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது. இலவச தடுப்பூசிகளை பொறுத்தவரை ஒவ்வொரு முகாமிலும் 100பேருக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான டோக்கன்கள் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வழங்கும் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் கையாண்டு வருகிறது. 

    இருப்பினும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தடுப்பூசி டோக்கன்களை வழங்குவதால் நிஜமாகவே இதைப்பெற வேண்டிய ஏழை, எளியவர்கள் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

    திருப்பூரை  பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் தேவைப்படுவோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் எளிதாகியிருக்கிறது. 

    அனைவரும் ஒன்றிணைந்து தடுப்பூசியை வேகமாக செலுத்தப்படுவதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். திருப்பூரில் தடுப்பூசி செலுத்துவதில் பலரிடமும் ஆர்வம் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னும்கூட  தடுப்பூசி மீது நம்பிக்கையின்மையுடன் இருப்போர் இருக்கத்தான் செய்கின்றனர்.

    அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. குறிப்பாக  முதல் டோஸ் செலுத்தியவர்களில் பலர் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு தயங்கும் நிலையும் காணப்படுகிறது.

    தடுப்பூசி மீதான நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் அதிகரிக்க செய்தல், இரண்டாவது டோஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் திருப்பூரில் 100 சதவீதத்தினரும் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் திருப்பூர்  தொற்று இல்லா இலக்கை விரைவில் எட்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
    Next Story
    ×