search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் ஒருவருக்கு சாதி சான்றிதழை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கியபோது எடுத்த படம்.
    X
    பெண் ஒருவருக்கு சாதி சான்றிதழை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கியபோது எடுத்த படம்.

    மலைவாழ் மக்களுக்கு மலையாளி சாதி சான்றிதழ் - நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

    தாளவாடி மலைப்பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு மலையாளிகள் சாதி சான்றிதழ் வழங்கி, அவர்களின் நீண்டகால கோரிக்கையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிறைவேற்றி உள்ளார்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். சோளகர்கள், ஊராளிகள், லிங்காயத்துகள் உள்ளிட்டஇன மக்கள் அதிக அளவில் இங்கு இருக்கிறார்கள்.

    இங்கு வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் தங்களுக்கு மலையாளிகள் என்ற சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பல ஆண்டுகளாக இவர்கள் மலையாளிகள் சாதி சான்று கேட்டு போராடி வந்தனர். சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் மிகவும் பின்தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் சாதி சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த மக்கள் சாதி சான்றிதழ் பெற தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்த அதிகாரிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தனர். உடனடியாக தாமதமின்றி பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நேற்று தாளவாடி மலைக்கிராமங்களில் மலையாளி சாதி சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்த அனைவருக்கும் இந்து மலையாளி என்று சாதி சான்றிதழ் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதற்காக நேற்று தாளவாடி மலைக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மலையாளி மக்கள் வசித்து வரும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அங்கேயே சாதி சான்றிதழ்களை வழங்கினார்.

    ஆசனூர் ஊராட்சிக்கு உள்பட்ட குழியாடா, புதுக்காடு, தேவர்நத்தம், கீழ்மாவள்ளம், சென்டர்தொட்டி, அரேபாளையம், சோளகர்தொட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்ற அவர் அங்கேயே மிக எளிமையாக பொதுமக்களிடம் சாதி சான்றிதழ்களை வழங்கினார்.

    மாணவ-மாணவிகள், இளைஞர்கள், முதியோர் என 264 பேர் நேற்று இந்து மலையாளி சாதி சான்றிதழ் பெற்றனர்.

    இவர்களுக்கு இதுவரை எந்த சாதி சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதி சான்று தேவைப்படும் கல்வி, வேலை வாய்ப்பு என எந்த வளர்ச்சியும் இல்லாதநிலையில் இருந்து மலையாளி மக்கள் மேம்பாடு அடைய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முதல் படியை எடுத்து உள்ளார்.

    இந்தநிலையில் தாளவாடி பயணியர் அரங்கில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை உருவாக்கும் முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கான உத்தரவு ஆனையையும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகைக்கான விண்ணப்பத்தையும் வழங்கினார்.

    அவர் சாதி சான்றிதழ் வழங்கியதும் அந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். எங்கள் நீண்ட கால கனவு நிறைவேறி விட்டது என்று அவர்கள் கூறினார்கள். அப்போது மாணவ-மாணவிகள் நன்றாக படித்து உயர்ந்த பணி மற்றும் பதவிகளில் வரவேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த சாதி சான்றிதழ் பெற்றதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை தடை இன்றி இந்த மக்கள் பெற முடியும். மலையாளி இன மக்கள் சாதி சான்றிதழ் பெறாதவர்கள் விண்ணப்பம் அளித்தால் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஆர்.டி.ஓ. பழனிதேவி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மலையாளி மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×