search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சேலம் மாவட்டத்தில் 7 மாதத்தில் 168 பெண்கள், சிறுமிகள் மாயம்

    கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை சேலம் மாவட்டத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட மொத்தம் 85 பேர், மாநகர பகுதியில் 83 பேர் என 168 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சமீப காலமாக பெண்கள், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இளம் வயதில் காதல் வசப்பட்டு காதலனுடன் செல்வோரும், கணவர் கொடுமையால் வீட்டை விட்டு செல்பவர்களும் அதிகமாகி வருகிறார்கள்.

    திருமணம் ஆனபிறகு கணவனை பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு செல்லாமல் காப்பகங்களை நாடுவோரும் அதிகரித்து உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை சேலம் மாவட்டத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட மொத்தம் 85 பேர், மாநகர பகுதியில் 83 பேர் என 168 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் சில மாயமான வழக்குகள் விசாரணையில் உள்ளன. சில பெண்கள் மீட்கப்பட்டு உள்ளார்கள். சிலர் காதலர்களுடன் திருமணமாகி பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் நிலையத்தில் தஞ்சமாகி சமரசம் அடைந்துள்ளனர். கள்ளக்காதலனுடன் ஓடிச்சென்ற பெண்களும் இதில் அடக்கம்.

    சூரமங்கலம் போலீஸ் சரகம் நரசோதிபட்டி மீனாட்சி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஷாலினி(வயது21). கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்த ஷாலினியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி மோகன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாலினி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சிக்கராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகள் அனிதா(24). இவர் சூரமங்கலம் ரெயில்வே குடியிருப்பில் தனது உறவினர் கவிதா என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 17-ந் தேதி பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியில் சென்ற அனிதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் அனிதாவை காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 20-ந்தேதி கொண்டலாம்பட்டி போலீஸ் சரகத்தில் ராமு என்பவரின் 2 வயது பெண் குழந்தை ஷெர்லின் மாயமானது. அதே நாளில் சூரமங்கலத்தில் வெங்கடேஷ் என்பவரது மனைவி காயத்ரி (28) தனது 8 வயது மகள் மவுஷிகாவுடன் காணாமல் போனார். கடந்த 16-ந்தேதி இரும்பாலை போலீஸ் சரகத்தில் ரகுபதி என்பவரது மனைவி மேரி ரேகா(32) தனது 7 வயது மகள் தர்ஷினியுடன் காணாமல் போனார். 10-ந் தேதி பள்ளப்பட்டி போலீஸ் சரகத்தில் ஆறுமுகம் மகள் சரண்யா(19), 5-ந்தேதி அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சின்னையன் மகள் சுமதி(17), அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லோகநாதன் மனைவி ஜீவரேகா(40), அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் பூவைக்கரசன் மனைவி சுகன்யா(28), கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாதேஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி(23) ஆகியோர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாயின.

    ஜூன் மாதத்தில் கன்னங்குறிச்சியில் பெருமாள் மகள் சந்திரா (20), லோகநாதன் மகள் வர்ஷினி, வீராணத்தில் ஜெயராமன் மனைவி சரண்யா (35), அல்லிமுத்து மகள் கோமதி(21), சபியுல்லா மகள் ஷானா (24), கொண்டலாம்பட்டியில் பிரகாஷ் மகள் அனிதா(31), அஸ்தம்பட்டியில் கண்ணன் மகள் சாந்தினி(21), அம்மாப் பேட்டையில் மாணிக்கம் மகள் ரேவதி(30) ஆகியோரும் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்கள், சிறுமிகள் மாயமாவது குறித்து புகார்கள் வருகின்றன. இதுபற்றி வழக்குகள் பதிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். வெகுநாட்களாக மீட்கப்படாமல் உள்ளவர்கள் குறித்து அவர்களது தகவல்களை பொது இடங்களில் தெரியப்படுத்தி தேடி வருகிறோம் என்றார்.

    மிஸ்சிங் வழக்குகளில் பல திருமணமான இளம்பெண்களே அதிக அளவில் கள்ளத்தொடர்பு காரணமாக வீட்டை விட்டு ஓடிச்செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. அவ்வாறு செல்வோர் சிலர் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்றுவிடுகிறார்கள். சிலர் கணவர், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்று விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது. சமூகத்தில் அந்த குழந்தைகள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது. கல்வி பாதிக்கிறது. எனவே இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
    Next Story
    ×