search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த இடத்தில்போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்திய காட்சி.
    X
    கொள்ளை நடந்த இடத்தில்போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்திய காட்சி.

    வாணியம்பாடியில் பைனான்சியரை தாக்கி ரூ.25 லட்சம் வழிப்பறி

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சினிமா பாணியில் பைனான்சியரை தாக்கி ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது45). பைனான்சியரான இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவில் குடியாத்தத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென ஞானசேகரன் காரை மற்றொரு காரில் வந்த கும்பல் மேம்பாலத்தில் மடக்கினர். காரில் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் 4 பேர் கும்பல் இறங்கினர்.

    அவர்கள் ஞானசேகரனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்ப முயன்றனர்.

    அந்த நேரத்தில் ஞானசேகரனின் நண்பர்களுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

    ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசினார்.

    இதனால் காரில் தப்பமுடியாமல் கொள்ளை கும்பல் அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி ஞானசேகரன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி செல்வம், சரவணன், ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்திய நம்பர் பிளேட் இருந்தது.

    மேலும் கொள்ளையர்கள் காரிலிருந்து பான்கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் தொப்பி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    காரில் போலீஸ் தொப்பி எப்படி வந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் வெற்றி பெற்ற பணம் சுமார் ரூ.25 லட்சத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சூதாட்டத்தில் ஏற்பட்ட மோதலால் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×