search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி-அதிகாரிகள் ஆலோசனை

    தங்கும் விடுதிக்கு பதில் அதிகளவில் குடியிருப்பு வீடுகளை ஏற்படுத்துவதன் மூலம் தொழிலாளர் குடும்பத்துடன் தங்கி பணிபுரியமுடியும்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 8-ந்தேதி முதல் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டனர். ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஜவுளி, தொழில் துறை, நிதித்துறை செயலர்களை நேரில் சந்தித்து  தொழில் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர் வசதிக்காக திருப்பூரில் குடியிருப்பு வீடுகள் கட்டவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    தொழில்துறையினரின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதன்படி ‘சிப்காட்’ இயக்குனர் கஜலட்சுமி, ‘இட்காட்’ இயக்குனர் பெருமாள் ஆகியோர் திருப்பூர் வந்தனர். அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

    ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இணைச்செயலாளர் சோமசுந்தரம், சங்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழு தலைவர் ராமசாமி, துணை தலைவர் நவமணி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பனியன் தொழிலாளர் தங்கும் விடுதி, குடியிருப்பு கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தங்கும் விடுதிக்கு பதில் அதிகளவில் குடியிருப்பு வீடுகளை ஏற்படுத்துவதன் மூலம் தொழிலாளர் குடும்பத்துடன் தங்கி பணிபுரியமுடியும். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிவதால் தொழிலாளர்களின் பொருளாதாரமும் மேம்படும். பின்னலாடை துறை சந்தித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையும் விலகிவிடும். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டனர்.

    பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு அறிக்கை தயாரித்து அளிக்க உள்ளதாக உறுதி அளித்துச்சென்றுள்ளனர். பின்னலாடை துறை வசம் போதுமான அளவு எந்திர சக்தி உள்ளது. எந்திரங்களை முழுமையாக இயக்குவதற்கு தொழிலாளர் சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர் குடியிருப்பு ஏற்படுத்துவதற்காக முதலீடுகள் செய்ய வேண்டும். இதனால் தொழிலாளர் இடம்பெயர்தல் தவிர்க்கப்படும். தொழிலாளர் பற்றாக்குறை விலகுவதன்மூலம் நிறுவப்பட்டுள்ள எந்திரங்கள் முழு இயக்கத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×