search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அதிமுக சார்பில் 28-ந்தேதி கவன ஈர்ப்பு போராட்டம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

    'விடியல் தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே. வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை வஞ்சிக்காதே. தமிழ்நாட்டு வாக்காளர்களின் உள்ள குமுறல்களை உலகுக்கு உரக்க சொல்லி கழக உடன்பிறப்புகளின் உரிமை குரல் முழக்கம்' என்கிற ரீதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

    தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும், நீட் தேர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவும், மெத்தனப் போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வருகிற 28-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் கழக உடன் பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரல்களால் ஒலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம். அது ஆளுவோரின் செவிப்பறையை சென்று சேரட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×