search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெளிமாநிலங்களில் கிளைகளை அமைக்க திருப்பூர் பனியன் நிறுவனங்கள் திட்டம்

    திருப்பூரை சேர்ந்த சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வெளிமாநிலங்களில் தங்கள் விரிவாக்க கிளைகளை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
    திருப்பூர், ஜூலை: 

    பின்னலாடை உற்பத்தி துறை அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் என வடமாநில தொழிலாளர்களும் அதிகளவில் இந்த துறை சார்ந்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர். கடந்த காலங்களில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தொழிலாளர் கிடைத்தனர். 

    ஆனால் தற்போது 50 சதவீதத்துக்கும்  மேல் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே தொழிலாளர் மிகுந்த பகுதிகளை நோக்கி நிறுவனங்களை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    குறிப்பாக திருப்பூரை சேர்ந்த சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள்  மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் தங்கள் விரிவாக்க கிளைகளை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    தற்போது வங்கதேசம், வியட்நாம், சீனா என வெளிநாடுகள் மட்டும்தான் திருப்பூர் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளன. காலப்போக்கில் திருப்பூர் உள்ளிட்ட தமிழக ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்கள் மிகப்பெரிய போட்டியாளராக மாறிவிட வாய்ப்புள்ளது. 

    இதனை கருத்தில் கொண்டு  தமிழக அரசு  பின்னலாடை தொழிலை மாநிலம் முழுவதும் பரவ செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வறட்சியான மாவட்டங்களை தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய  ஜவுளி பூங்காக்களை ஏற்படுத்தவேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    அரசு உதவியுடன், ‘டீமா’ சங்கம் வேதாரண்யத்தில் ‘வேதா ஆயத்த ஆடை பூங்கா’ வை நிறுவ உள்ளது. பிற மாநிலங்களை போன்று  தமிழக அரசு சிறப்பு சலுகைகளுடன் கூடிய  தொழில் வளர்ச்சி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

    ஜவுளி தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் செயற்கை இழையை கொண்டு மதிப்பு கூட்டிய பின்னலாடைகளை தயாரிக்கலாம். இதன் மூலம் வெளிமாநிலங்களை நோக்கிய இடம்பெயர்தல் தவிர்க்கப்படும்.

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். கிராமப்புற பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவர். மாநில பொருளாதாரமும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்றார்.
    Next Story
    ×