search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஆர் விஜயபாஸ்கர்
    X
    எம்ஆர் விஜயபாஸ்கர்

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு-அலுவலகங்களில் சோதனை

    கரூர் ஆண்டாள்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வன் நகரிலும் விஜயபாஸ்கரின் வீடு உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்றது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கடந்த 5 ஆண்டுகளும் முழுமையாக விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தார். கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ள இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். சாய பட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் அப்போதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் கவர்னரிடம் அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின்
    நேரில் சென்று இதனை வழங்கினார்.

    இந்த பட்டியலில் போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆட்சி மாற்றத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யாக கந்தசாமி நியமிக்கப்பட்டார். பெண் போலீஸ் டி.ஐ.ஜி.களான பவானீஸ்வரி, லட்சுமி ஆகியோரும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 21 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கோவில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக 2-வது தளத்தில் வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    கரூர் ஆண்டாள்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வன் நகரிலும் விஜயபாஸ்கரின் வீடு உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டு அருகில் உள்ள சாய பட்டறை, சகோதரர் ரெயின்போ சேகர் வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு வேட்டை நடைபெற்றது.

    கரூர் தோரணகல்பட்டியில் வசித்து வரும் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான ஏகாம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் ஒரு இடத்திலும், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    அனைத்து இடங்களிலும் இன்று காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் சோதனையை போலீசார் தொடங்கினர்.

    டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்கிய போலீஸ் படை விஜயபாஸ்கருக்கு சொந்தமான அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியது.

    இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ''21 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்'' என்று கூறினார்.

    விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றதை அறிந்ததும் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடுகளுக்கு
    அ.தி.மு.க.
    தொண்டர்கள் வர தொடங்கினர். ஆனால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கதவுகளை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். வெளியில் இருந்து யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் சென்னை, கரூரில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தி வரும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகத்துக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டன. பணி நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விஜயபாஸ்கர் மறுத்து இருந்தார்.

    இந்த நிலையில் தான் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று உள்ளது.

    எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ள அப்பார்ட்மெண்ட்

    விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து இருந்தது. கரூர் தொகுதியில் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி களம் இறங்கி வெற்றி பெற்றார். தற்போது அவர் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    போக்குவரத்து கழகத்துக்கு விஜயபாஸ்கரால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து குவித்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை ஜெயிலில் தள்ளுவோம் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே இன்று சோதனை நடைபெற்றுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மேலும் பல முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



    Next Story
    ×