search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாசில்தார் கலாவதி
    X
    தாசில்தார் கலாவதி

    கருப்பு பூஞ்சை தொற்றால் ஊத்துக்குளி பெண் தாசில்தார் பலி

    கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய அவருக்கு அவ்வப்போது உடல் உபாதை ஏற்பட்டு வந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் கலாவதி (வயது 52). இவர் ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய அவருக்கு அவ்வப்போது உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம்  சிகிச்சை பெற்ற போது கலாவதி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கலாவதிக்கு ஒரு கண் செயலிழந்தது. 

    தொடர்ந்து  சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கலாவதி இறந்தார். அவருக்கு கணவரும், மகனும் உள்ளனர். கருப்பு பூஞ்சையால் தாசில்தார் கலாவதி இறந்த சம்பவம் வருவாய்த்துறை பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

    நேற்று புதியதாக 106 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 86 ஆயிரத்து 818 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,596 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று கொரோனாவிலிருந்து குணமடைந்து 126 பேர் வீடு திரும்பினர். இதுவரை  84 ஆயிரத்து 407 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இதுவரை 815 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தநிலையில்  கருப்பு பூஞ்சையால் பெண் தாசில்தார் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×