search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் கார்டு
    X
    ஸ்மார்ட் கார்டு

    தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்

    ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரே‌ஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 2 கோடியே 5 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள்.

    குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி- சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன.

    ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ரே‌ஷன் கார்டு


    இதற்கிடையில் புதிய ரே‌ஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் ஒருபுறம் குவிகின்றன. இதுவரையில் 60 நாட்களுக்குள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

    தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 15 நாட்களுக்குள் புதிய ரே‌ஷன் கார்டு விண்ணப்பித்தவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கிறார்கள். அதேபோல 10 முதல் 12 ஆயிரம் புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன என்று சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதிய அரசு 15 நாட்களுக்குள் ரே‌ஷன் கார்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 60 நாட்கள் என்று இருந்த நிலையில் அதனை 15 நாட்களாக சாப்ட்வேரில் மாற்றம் செய்ய வேண்டும்.

    புதிய ரே‌ஷன் கார்டோ அல்லது பெயர் நீக்குதல் சான்றோ இந்த கால கட்டத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் தற்போது 3 லட்சம் பேர் புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி புதிய கார்டு வழங்குவதற்கான நடைமுறைகளை தொடங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×