search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதிய கொள்கையில் எந்திர மானியம் மறுபரிசீலனை செய்ய பின்னலாடை நிறுவனங்கள் வேண்டுகோள்

    அனைத்து குறு நிறுவனங்களுக்கும் ரூ.1கோடி வரை எந்த எந்திரம் கொள்முதல் செய்தாலும் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
    திருப்பூர்:

    தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை புதுப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏராளமான அம்சங்களை உள்ளடக்கிய இதில் திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு பலன் தரும் திட்டங்கள் குறித்து ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் கூறியதாவது:-

    புதிய கொள்கைப்படி மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் 25 சதவீத முதலீட்டு மானியத்துக்கான உச்சவரம்பு தொகை ரூ.1.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை மூன்று தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி மதிப்பிலான எந்திரம் கொள்முதலின்போது ரூ.1.50 கோடி வரை மானியம் பெற முடியும். குறு நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம், சிறு, நடுத்தர வகைப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவோ, சிறு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவோ மேம்படுத்தப்பட்டால் அதற்கு கூடுதலாக 5 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை கிடைக்கும். மகளிர், பட்டியலின பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவரின் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதலாக 5 சதவீத முதலீட்டு மானியமாக அதிகபட்சம்  ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்.

    அனைத்து குறு நிறுவனங்களுக்கும் ரூ.1கோடி வரை எந்த எந்திரம் கொள்முதல் செய்தாலும் (மாசு ஏற்படுத்தும் எந்திரம் நீங்கலாக) அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். பின்னலாடை துறை, தொழில்நுட்ப ஜவுளி துறை உட்பட 23 துறைகளுக்கு இந்த மானியம் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்புகளெல்லாம் திருப்பூர் பகுதி குறு, சிறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எந்திரங்களை பொறுத்தமட்டில் மத்திய அரசின் ‘ஏடப்’ திட்டத்தில் 15 சதவீதம் பெற்றாலும் வெளிமாநில அரசுகள் 25 சதவீத மானியத்தை வழங்குகின்றன.

    ஆனால் புதிய கொள்கை மூலம் தமிழக அரசு அறிவித்திருப்பது கசப்பை ஏற்படுத்துகிறது. கொரோனாவால் நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நிலை பாதிப்பை எதிர் கொண்டுள்ளன. எனவே பிற மாநில அரசுகள் போன்று தமிழக அரசும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் 15 சதவீதத்துடன், மாநில அரசு 25 சதவீதம் வழங்கி மொத்தம் 40 சதவீத மானியம் கிடைக்க செய்ய வேண்டும். இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×