search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1.60 கோடி மதிப்பிலான 3.2 கிலோ தங்கம் பறிமுதல்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பயணியிடம் இருந்து 780 கிராம் தங்கமும், பரமக்குடியை சேர்ந்த பயணியிடம் இருந்து 930 கிராம் என நான்கு நபர்களிடமிருந்து ரூ.1.60 கோடி மதிப்பிலான 3 கிலோ 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் வருகின்றன. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமாம், மஸ்கட், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இந்த விமானங்களில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்த நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பயணியிடம் இருந்து 800 கிராம் தங்கமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணியிடம் இருந்து 780 கிராம் தங்கமும்,

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பயணியிடம் இருந்து 780 கிராம் தங்கமும், பரமக்குடியை சேர்ந்த பயணியிடம் இருந்து 930 கிராம் என நான்கு நபர்களிடமிருந்து ரூ.1.60 கோடி மதிப்பிலான 3 கிலோ 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விமானத்தில் கடத்தி வந்த பயணிகளிடம் இருந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த 3 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் பறிமுதல் செய்த நான்கு நபர்கள் மற்றும் தங்கத்தை பெற வந்த 3 நபர்கள் என மொத்தமாக 7 பயணிகளை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சுங்கத்துறை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மேந்திரா என்பவர் தங்கம் கடத்தி வருவதற்கு உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×